மட்டக்களப்பு இந்துக் கல்லூரி (தேசிய பாடசாலை) யின் 76ஆவது ஆண்டு தின நிகழ்வுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பாடசாலை அதிபர் இரா.சண்டேஸ்வரன் தலைமையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.
1946 ஆண்டு பெப்ரவரி 01 ஆம் திகதி அப்போது அரசாங்க சபையின் பிரதிநிதியாக இருந்த அமரர் நல்லையா அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையானது கடந்த ஆண்டு பவள விழாவினை கொண்டாடியிருந்த நிலையில் அதே ஆண்டு தேசிய பாடசாலையாகவும் தரமுயர்த்தப்பட்டிருந்தது.
இதன்படி மட்டக்களப்பு இந்துக் கல்லூரி (தேசிய பாடசாலை) யின் 76ஆவது ஆண்டு தின நிகழ்வானது இன்று காலை அதிதிகள் வரவேற்பு, கொடியேற்றுதல், பாடசாலையின் ஸ்தாபகர் நல்லையா அவர்களின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து கல்லூரியின் பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் சத்துருகொண்டான் “ஓசாணம்” சிறுவர் இல்லத்திற்கு தேவையான அத்தியவசிய பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.