களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் நால்வர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான சந்தேக நபர் நேற்று இரவு சட்டத்தரணி ஊடாக ராகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக மொத்தம் ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது நேற்று (புதன்கிழமை) அதிகாலை வெளி குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில், மூன்று மாணவர்கள் ராகம வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு வாகனங்களில் வந்த 15 பேர் கொண்ட குழு இந்த தாக்குதலை நடத்தியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக களனி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் 2 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.