சீனா, பாகிஸ்தானை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் மோதல்போக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக இராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே தெரிவித்துள்ளார்.
நிலவழியான போர்முறை ஆய்வுகள் மையம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”அணுஆயுத சக்தி கொண்ட அண்டை நாடுகள் மோதல் போக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அரசுகளே பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
அதன் காரணமாக எல்லைப் பகுதிகளில் இராணுவ வீரர்களை அதிக எண்ணிக்கையில் தயார்நிலையில், நிறுத்திவைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காப்பதற்காக பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் நவீன தொழிநுட்பங்களையும் பயன்படுத்த வேண்டியுள்ளது.
இணையவழியில் தொடா்ந்து தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. அதைக் கருத்தில் கொண்டு எதிா்காலத்துக்கான பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பயங்கரவாதம் பரவுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.