பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், சுகாதாரத் துறையிலிருந்து சுற்றறிக்கை அல்லது விழிப்புணர்வை மேற்கொண்டால், மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மட்டுமே பொது போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என்ற வழிமுறையை கடைப்பிடிக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
ஏனெனில் இது ஒரு தொற்றுநோய் என்றும் அந்த நிலைமை தொடர்பான முடிவுகளை சுகாதார அமைச்சே எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இவர்கள்தான் பொதுப் போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என்று அவர்கள் தமக்கு அறிவுறுத்தல் வழங்கினால், அந்த வழிமுறைக்கு ஏற்றாற்போல் மாற வேண்டி ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து எழுத்துப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் தாங்கள் அளிக்கவில்லை என்றும் ஆனால் சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டு எழுத்து மூலம் தமக்கு அறிவிக்கப்படுமாயின், தனியார், அரச பேருந்துகள் மற்றும் ரயிலுக்கு அறிவிக்கப்பட்டு தடுப்பூசி அட்டைகளை சரிபார்க்க அறிவுறுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.