உலகளாவிய சுற்றுலாத் துறையில் பாதுகாப்பான இடமாக இலங்கை முத்திரை குத்தப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்குமென அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இந்த ஆண்டு 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) மற்றும் சுற்றுலாத் துறைக்கான சேவை வழங்குநர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை, ஏற்றுமதி வருவாய் மற்றும் வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் ஆகியவற்றின் முன்னேற்றத்தின் அறிகுறிகள் ஏற்கனவே இருப்பதால் 2022 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டு கையிருப்பு திருப்திகரமாக உயர்ந்தவுடன் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.