தோட்டத் தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தற்போதைய அரசாங்கத்தினால் வாக்குறுதியளிக்கப்பட்ட எதனையும் தோட்டத்துறைக்கு பெற்றுக்கொடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “அரசுத் துறை ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டதுடன், தோட்டத் தொழிலாளர்களுக்கு 15 கிலோ மாவு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அவர்களுக்கு தினக்கூலியாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும். எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை நாங்கள் முன்மொழிகிறோம்.
அரிசி, எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு இல்லாததால் இன்று நாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.
மின்வெட்டு குறித்தும் பேசப்படுகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளதுடன் 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த உதவிக்காக இந்திய அரசுக்கும் மக்களுக்கும் நன்றி.
சில தொழிற்சங்கங்கள் இலங்கை சீனாவுடன் கையாளும்போது அமைதியாக இருக்கும் ஆனால் இலங்கை இந்தியாவுடன் கையாளும்போது எதிர்க்கின்றன. நான் பரிந்துரைக்கும் விஷயம் என்னவென்றால், இந்தியா மற்றும் சீனாவுடன் நாம் அதே வழியில் நடந்துகொள்ள வேண்டும். இலங்கை இந்தியாவிலிருந்து விலகி இருக்கக்கூடாது. அப்படி ஒரு சம்பவம் நடந்தால் பாதிக்கப்படப் போவது இலங்கைதான்” என்று அவர் மேலும் கூறினார்.