ஜனநாயக செயன்முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்ட தற்போதைய அல்லது முன்னாள் சோமாலிய அதிகாரிகளுக்கு எதிராக விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
சோமாலியாவில் நீண்டகாலம் தாமதமாகி வரும் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேர்தல்களை நடைமுறைப்படுத்துவதற்கான தங்கள் கடமைகளைப் பின்பற்றத் தவறியவர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் பொருந்தும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர், எதிர்க்கட்சி உறுப்பினர்களை துன்புறுத்தல், மிரட்டல், கைது மற்றும் வன்முறையை பிரயோகிக்கும் அதிகாரிகளுக்கு இது பொருந்தும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
பர்மாஜோ என்று அழைக்கப்படும் ஜனாதிபதி மொஹமட் அப்துல்லாஹி முகமதுவின் ஆட்சி காலம் கடந்த ஆண்டு பெப்ரவரியில் நிறைவடைந்த நிலையில் தேர்தல்களை சோமாலியா ஒத்திவைத்துள்ளது.
மறைமுக நாடாளுமன்றத் தேர்தல்கள் நவம்பரில் தொடங்கி டிசம்பர் 24 ஆம் திகதிக்குள் முடிவடையவிருந்தபோதும் ஏற்பட்ட சர்ச்சைகளால் அந்த திட்டமும் கைவிடப்பட்டது.
எனவே காலக்கெடுவிற்குள் செயன்முறையை முடிக்க அரசியல் தலைவர்கள் தங்கள் உறுதிமொழிகளைப் பின்பற்ற வேண்டும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.