உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.
403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் இன்று ஆரம்பமாகி மார்ச் 7 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்டத் தோ்தல், மேற்கு உத்தர பிரதேசத்திலுள்ள ஷாம்லி, ஹாபூா், கௌதம்புத்தா நகா், முசாஃபா்நகா், மீரட், காஜியாபாத், புலந்த்சாஹா், அலிகா், மதுரா, ஆக்ரா, பாக்பத் ஆகிய 11 மாவட்டங்களுக்கு உள்பட்ட 58 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் கட்டத் தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சுரேஷ் ராணா, அதுல் கர்க், சந்தீப் சிங், அனில் சர்மா உள்ளிட்ட 9 பேர் உள்பட 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.27 கோடி பேர் தங்களின் வாக்கை பதிவு செய்யவுள்ளனர். வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் கடந்த 2017 இல் நடைபெற்ற தேர்தலில் பாஜக 53 தொகுதிகளிலும், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி தலா 2 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய லோக் தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.