உத்தரபிரதேச மாநிலத்தின் 11 மாவட்டங்களிலுள்ள அனைத்து வாக்காளர்களும் “ஜனநாயகத்தின் புனித திருவிழாவில்” ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.
403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் இன்று ஆரம்பமாகி மார்ச் 7 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்டத் தோ்தல், மேற்கு உத்தர பிரதேசத்திலுள்ள ஷாம்லி, ஹாபூா், கௌதம்புத்தா நகா், முசாஃபா்நகா், மீரட், காஜியாபாத், புலந்த்சாஹா், அலிகா், மதுரா, ஆக்ரா, பாக்பத் ஆகிய 11 மாவட்டங்களுக்கு உள்பட்ட 58 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இன்று உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஜனநாயகத்தின் இந்த புனித திருவிழாவில், கரோனா முன்னெச்சரிக்கை விதிகளைப் பின்பற்றி வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முதலில் வாக்களியுங்கள், பிறகு சிற்றுண்டி அருந்துங்கள்!” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.