சவுதி இராணுவ எல்லைக்கு அருகில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து, யேமன் கிளர்ச்சியாளர் ஆளில்லா விமானத்தை வெடிக்கச் செய்ததில் 12பேர் காயமடைந்துள்ளனர்.
இதற்கு பொறுப்பேற்றுள்ள ஹெளதி கிளார்ச்சியாளர்கள், சவுதி இராணுவ நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட விமான நிலையத்தை குறி வைத்ததாகவும், பொதுமக்கள் அத்தகைய தளங்களில் இருந்து விலகி இருக்குமாறும் எச்சரித்துள்ளனர்.
அபா சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா விமானத்தை சவுதி பாதுகாப்புப் படைகள் அழித்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஆளில்லா விமானத்தை இடைமறித்த பிறகு வெடித்த துண்டுகள் தரையில் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆளில்லா விமானம் இடைமறித்தபோது பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை மற்றும் இரண்டு சவுதிகளின் குடிமக்கள் உட்பட 12 பொதுமக்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு பதிலடியாக, யேமனின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகரான சனாவில், ஹெளதிகள் ஆளில்லா விமானங்களை ஏவுகின்ற நிலைகளை தாக்கப்போவதாக சவுதி தலைமையிலான கூட்டணி கூறியுள்ளது.
அடுத்த 72 மணி நேரத்திற்கு இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் சிவிலியன் தளங்களை காலி செய்யுமாறு சனாவில் உள்ள பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’ என சவுதி தலைமையிலான கூட்டணி அறிவித்துள்ளது.
ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள், 2015ஆம் ஆண்டு முதல் சவுதி தலைமையிலான கூட்டணியுடன் சண்டையிட்டு வருகின்றது.
விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிறுவல்கள் உள்ளிட்ட சவுதி இலக்குகள் மீது அடிக்கடி ஆளில்லா விமானத் தாக்குதல்களை ஹெளதிகள் நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய மாதங்களில், அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் சக கூட்டணி உறுப்பினரையும் குறிவைத்து, முதன்முறையாக, தாக்குதல் நடத்தினர்.
இதில் கடந்த ஜனவரி 17ஆம் திகதி அபுதாபியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் நடத்தியதில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.