ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, இந்தியா, அவுஸ்ரேலியா மற்றும் கனடா முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சர்வதேச வலையமைப்பானது, சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் கட்டாய தொழிலாளர் முறைகேடுகளில் ஈடுபடும் வங்கி நிறுவனங்களிலிருந்து முதலீட்டாளர்களைத் தடுக்குமாறு தங்கள் அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
2020ஆம் ஆண்டில் அமெரிக்க திறைசேரித் துறையின் தடைகளால் பாதிக்கப்பட்ட ஷின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமானப் படையின் துணை நிறுவனத்தில் எச்.எஸ்.பி.சி.பங்குகளை வைத்திருப்பதாக அறிக்கைகள் வெளிவந்ததை அடுத்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
10 இற்கும் மேற்பட்ட நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 35 சட்டமன்ற உறுப்பினர்கள், உய்குர் பிராந்தியத்தில் அட்டூழியங்களைச் செய்ததாக அடையாளம் காணப்பட்ட நிறுவனங்களை தடை செய்யும் பட்டியலை உருவாக்குமாறு தங்களின் அரசாங்கங்களை வலியுறுத்தியுள்ளனர்.
குறித்த கோரிக்கைகள் ஒவ்வொரு அரசாங்கங்களுக்கும் தனித்தனியாக கடிதங்களாக வடிவமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன.
மிக முக்கியமாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சீன தூதுக்குழுவின் தலைவரான ரியின்ஹார்ட் புட்ரிக்கோபர் கையொப்பமிட்டவர்களில் உள்ளடங்குவதோடு பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் தலைவர் இயன் டங்கன் ஸ்மித், அவுஸ்ரேலியா தொழிலாளர் செனட்டர் கிம்பர்லி கிச்சிங் மற்றும் இந்திய பி.ஜே.டி. சுஜீத் குமார் எம்.பி, ஐரோப்பிய ஆணையர் மைரேட் மெக்கின்னஸ் மற்றும் பிரித்தானியவின் ரிஷி சுனக் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் அந்தந்த நிதி அமைச்சர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
சீன அரசால் இயக்கப்படும் துணை இராணுவக் குழுமம், ஷின்ஜியாங்கின் கட்டாய தொழிலாளர் பரிமாற்றத் திட்டங்களை முன்னெடுப்பதோடு, பிராந்தியத்தின் பல ‘தொழில் பயிற்சி’ மையங்களை இயக்குகிறது.
இங்கு குறைந்தது ஒரு மில்லியன் உய்குர்கள் தடுத்து வைக்கப்பட்டு துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகியுள்ளனர் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
இச்செயற்பாடானது கட்டாய உழைப்பு, சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்குள் காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2020 டிசம்பரில் ஹொங் கொங்கின் முன்னாள் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் டெட் ஹுய்யின் சொத்துக்களை முடக்கியதில் எச்.எஸ்.பி.சி முன்பு ஐ.பி.ஏ.சி. உறுப்பினர்களிடமிருந்து விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த நிகழ்வுகள் பிரித்தானிய பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவின் முன் எச்.எஸ்.பி.சி அழைக்கப்படுவதற்கு வழிவகுத்தது, அங்கு நகரத்தின் ஜனநாயக சார்பு இயக்கத்தின் மீது ஹொங்கொங் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு உதவிகளை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
‘ஷின்ஜியாங்கில் நடைபெறும் முறைகேடுகளுக்கு நிதியளிப்பதில் பெரிய வங்கிகள் வகிக்கும் பங்கை நாம் புறக்கணிக்க முடியாது.
கட்டாய உழைப்பு மற்றும் பிற மனித உரிமை மீறல்களைச் செய்யும் நிறுவனங்களில் அவர்கள் தெரிந்தே முதலீடு செய்கிறார்கள் என்றால், அவர்களிடம் நிதி விளக்கம் கோருவது சரிதான்’ என ரியின்ஹார்ட் புட்ரிக்கோபர் குறிப்பிட்டார்.
கட்டாய உழைப்பைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் எங்கள் சந்தைகளுக்குள் நுழைவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், எங்கள் வங்கிகள் அவற்றில் முதலீடு செய்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அவசரமாக முன்வைக்க ஆணையத்தை நாங்கள் அழைக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
சியோபைன் மெக்டொனாக், என்ற சட்ட மன்ற உறுப்பினர் ‘ஷின்ஜியாங் தியான்யேயில் இன் முதலீடுகள் சர்வதேச நிதி மற்றும் உய்குர் பிராந்தியத்திற்கு இடையேயான ஆழமான உறவுகளை நிரூபிக்கின்றன. உய்குர்களுக்கு எதிராக தொழில்துறை அளவிலான மனித உரிமை மீறல்களைச் செய்யும் குழுக்களில் முதலீடு செய்யக் கூடாது.
உய்குர் பிராந்தியத்திலும் பிற இடங்களிலும் நவீன அடிமைத்தனத்தை வங்கியில் ஈடுபடுத்தும் பிரித்தானிய நிறுவனங்களைத் தடுக்க இங்கிலாந்து அரசாங்கம் செயல்பட வேண்டும் என அவர் மேலும் கூறினார்.