தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முடக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் 7 பில்லியன் டொலர்கள் நிதியின் பாதித் தொகையை மனிதாபிமான நிவாரணத்துக்கு விடுவிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதன் மீதித் தொகையை 2001ஆம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நிவாரணத்துக்கும் விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதம் ஆப்கானை தலிபான்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டபோது, அந்நாட்டின் வெளிநாட்டு நிதி முடக்கப்பட்டது. இந்த நிதி பெரும்பாலும் அமெரிக்க வங்கிகளில் உள்ளது. முந்தைய ஆப்கான் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்துக்கான நிதி சர்வதேச சமுதாயத்திடம் இருந்துதான் கிடைத்துள்ளது.
இதன்படி, அமெரிக்க வங்கிகளில் ஆப்கான் மத்திய வங்கியின் நிதி 7 பில்லியன் டொலர்கள் முடக்கப்பட்டுள்ளது.
இதில் 3.5 பில்லியன் டொலர்கள் அமெரிக்காவிலேயே வைக்கப்பட்டு, இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கோரி தலிபான்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளவர்களுக்கு நிவாரணமாக விடுவிக்கப்படவுள்ளது.
மீதமுள்ள தொகை ஆப்கனில் மனிதாபிமான உதவிகளுக்கு விடுவிக்கப்படும். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானுக்கு 9 பில்லியன் டொலர்களுக்கு அதிகமான தொகை வங்கிகளில் உள்ளது. அமெரிக்காவைத் தவிர ஜேர்மனி, ஐக்கிய அரபு அமீரகம், சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளில் மீதமுள்ள தொகை உள்ளது.