கடந்த மாதம் 27ஆம் தேதி, ஐரோப்பிய நாடாளுமன்ற இணைக்குழு முன்னிலையில், இலங்கையின் மனித உரிமை மற்றும் தொழிலாளர் உரிமை குறித்து கருத்துக்கள் பரிமாற்றப்பட்ட ஒரு மெய்நிகர் சந்திப்பில், அம்பிகா சற்குணநாதன், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். அக்கருத்துக்களுக்கு இலங்கைத்தீவின் வெளிவிவகார அமைச்சு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
அம்பிகா சர்குணநாதன் ஒரு சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் ஆவார்.கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கூட்டமைப்புடன் காணப்பட்டார்.அவர் மேற்படி மெய்நிகர் சந்திப்பின் போது தெரிவித்த கருத்துக்கள் அரசாங்கத்துக்கு சீர்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இலங்கைத்தீவின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக அம்பிகா பின்வரும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்…
முதலாவது, போதைப்பொருள் கடத்தப்படுவதற்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் சந்தேகநபர்கள் முறையற்ற விதத்தில் கைது செய்யப்படுவதாகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கொலை செய்யப் படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது போதைப் பொருட் குற்றவாளிகளை கையாளும் விடயத்தில் அரசாங்கம் என்கவுண்டர் மூலம் குற்றவாளிகளை கொல்வதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக உண்டு. ஒரு பெரும் தொற்றுநோய் சூழலுக்குள் நாட்டின் கவனம் வைரஸின் மீது குவிந்திருக்க அரசாங்கம் போதைப்பொருள் குற்றவாளிகளில் ஒரு பகுதியினரை அவ்வாறு கொன்றுவிட்டதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இரண்டாவதாக,அரசாங்கம் அமைச்சுக்களை ராணுவ மையப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மூன்றாவதாக,அரசு அதிகாரிகளின் வன்முறைகள் தொடர்பாக குற்றம்சாட்டியுள்ளார்.நாலாவதாக,’ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி குறித்து விமர்சித்துள்ளார்.ஐந்தாவதாக, கிழக்கு மாகாணத்துக்காக ஜனாதிபதி நியமித்த தொல்லியல் செயலணி குறித்து விமர்சித்துள்ளார். ஆறாவதாக,சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கம் அக்கறையோடு இல்லஎன்றும் விமர்சித்துள்ளார்,
இந்த விமர்சனங்களின் அடிப்படையில் அரசாங்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் அதன் கேட்டிருக்கிறார்.குறிப்பாக ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான அழுத்தத்தின் மூலம் அரசாங்கம் மனித உரிமைகளைப் பேணுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார்.
இந்த மாதம் 29ஆம் திகதி நாற்பத்தி ஒன்பதாவது ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாக இருக்கும் ஒரு பின்னணியில் அம்பிகாவின் கருத்துக்கள் அரசாங்கத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. மேலும் வரும் ஏப்ரல் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ் பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான முடிவை எடுக்க இருப்பதனால் மேற்கண்ட கருத்துக்கள் அரசாங்கத்தை பாதிக்கும் என்றும் அரசாங்கம் நம்புவதாக தெரிகிறது. ஒரு மனித உரிமைகள் சட்டத்தரணிக்கு எதிராக ஒரு நாட்டின் வெளியுறவு அமைச்சு அறிக்கை விடுமளவுக்கு நிலைமை வந்திருக்கிறது. இது இலங்கையின் மனித உரிமைகள் நிலவரத்தை வெளிப்படுத்தும் ஒரு குறிகாட்டி அல்லது குறியீடு எனலாம்.
மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பிக்கவிருக்கும் ஒரு பின்னணியில் அரசாங்கம் கடுமையாக ஐநாவிக்கான வீட்டு வேலைகளை செய்து வருகிறது. ஒருபுறம் நீதிக்கான அணுகல் என்ற தலைப்பில் நீதியமைச்சரும் வெளிவிவகார அமைச்சரும் வடக்கிற்கு விஜயம் செய்தார்கள். இன்னொருபுறம் ஒரு தொகுதி அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பின் கைதுசெய்யப்பட்ட முஸ்லிம் சட்டச் செயற்பாட்டாளரும் மற்றொரு கவிஞரும் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வுசெய்து ஒரு புதிய சட்டத்தை வரையும் நடவடிக்கைகளில் அரசாங்கம் உண்மையாக இருப்பதாக ஒரு தோற்றம் கட்டி எழுப்பப்படுகிறது. புதிய சட்ட வரைவை மனித உரிமைகள் ஆர்வலர்களும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்திருக்கிறார்கள். எனினும் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக அகற்றும் நிலையில் இல்லை என்று தெரிகிறது.
இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் அம்பிகாவின் வாக்குமூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று அரசாங்கம் பதட்டம் அடைவதாக தெரிகிறது. எனினும் இந்தியாவை அரவணைப்பதன் மூலம் ஜெனிவா கூட்டத் தொடரை சமாளிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது.
அண்மையில் அமைச்சர் பீரிஸ் புது டில்லிக்கு விஜயம் மேற்கொண்டார். இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான தருணத்தில் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ள 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி இலங்கைத்தீவைப் பொறுத்தவரை மிகவும் பெறுமதியானது. தனது இந்திய விஜயம் தொடர்பாக ஜி.எல்.பீரிஸ் கருத்துக்கூறும் போது…இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, பரிவர்த்தனை உறவில் இருந்து கேந்திரக் கூட்டாளி உறவாக பரிணமித்துள்ளது என்று கூறியுள்ளார். இலங்கை எப்பொழுதும் நம்பியிருக்கக்கூடிய உண்மையான நண்பன் இந்தியாவாகும் என்பதை இலங்கை மக்கள் அதிகளவில் அங்கீகரித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு எப்போதும் இலங்கைக்கு ஆதரவானதாக இருக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது உறுதியளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கின்றது.
சந்திப்பின்போது இந்திய வெளியுறவு அமைச்சர் இனப்பிரச்சினை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் வழமையானவை.பொத்தாம்பொதுவான வார்த்தைகளைக் கொண்டவை.சுட்டிப்பானவை அல்ல.குறிப்பாக இந்திய பிரதமருக்கு ஆறு கட்சிகள் கூட்டாக சேர்ந்து ஒரு கடிதத்தை அனுப்பிய பின்னரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் அதே பழைய பாணியில் அதே பழைய பொத்தாம் பொதுவான வார்த்தைகளைப் பயன்படுத்தித்தான் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்யும் மேற்கத்தைய நாடுகளின் தூதுவர்களும் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களும் அவ்வாறுதான் கருத்துத் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு வடக்கிற்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு ஒன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்தபோது ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பாக அவ்வாறான கருத்துக்களைத்தான் தெரிவித்தது. அரசாங்கத்துக்கு எதிராக அந்த வரிச்சலுகையை நிறுத்தினால் அரசாங்கம் மேலும் தமது பிடியிலிருந்து விலகிச் சென்றுவிடும் என்றும் அதனால் அரசாங்கத்தை கையாள்வது கடினம் ஆகிவிடும் என்றும் அவர்கள் கருதுவதாக தெரிகிறது. அதாவது அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் ஏதோ ஒரு மாற்றத்தைக் காட்டுமாக இருந்தால் ஐரோப்பிய ஒன்றியம் அதை ஏற்றுக்கொண்டு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்கக்கூடிய நிலைமைகளே அதிகமாகத் தெரிகின்றன.
எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் அரசாங்கம் ஐநா அமெரிக்கா இந்தியா போன்ற தரப்புக்களுடன் குறிப்பிடத்தக்க அளவுக்கு சுதாரிக்க முற்படுவது தெரிகிறது. இது இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும்.இந்த ஜெனிவா கூட்டத்தொடர் ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் குறைந்தது என்றும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் கூட்டத்தொடரே முக்கியத்துவம் உடையது என்றும் கூறப்படுகிறது. எதுவாயினும் அரசாங்கம் ஜெனிவாக் கூட்டத் தொடர்களை நோக்கி திட்டமிட்டு உழைத்து வருகிறது. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறான திட்டமிட்ட உழைப்பு இருப்பதாக தெரியவில்லை.
ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்வது தொடர்பில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் தரப்பிடம் ஒன்றிணைந்த நடவடிக்கை எதுவும் கிடையாது. ஒருபக்கம் புலம் பெயர்ந்த தமிழ்த் தரப்பு.ஒப்பிட்டளவில் ஜெனிவாவை நோக்கி அதிகமுழைப்பது புலம்பெயர்ந்த அமைப்புக்கள்தான். அங்கேயும் ஒற்றுமை இல்லை. ஆளுக்காள் தங்களை தமிழ் மக்களின் அம்பாசிடர்கள் என்று கூறிக்கொண்டு ஐநாவுக்கு வருகிறார்கள். இன்னொருபுறம் தாயகத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகளும் ஒன்றிணையும் சாத்தியம் குறைந்து வருகிறது.
கடந்த ஜனவரி மாத ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டால் ஒருங்கிணைப்பு முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அது ஓர் அரிதான புறநடை.அப்படி ஒரு அதிசயம் இனி நடக்குமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கை அனுப்பிய விடயத்தில் தமிழ்த் தேசிய கட்சிகள் கூர்மையான விதத்தில் இரண்டுபட்டு நிற்கின்றன. எனவே இனிவரும் காலங்களில் ஜெனிவாவை நோக்கி இந்தக் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முன்னரை விட அதிகரித்த சவால்களுக்கு இடமுண்டு.
கடந்த ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன் ஒரு கூட்டுக் கடிதத்தை தயாரித்த பொழுது அதில் இணைந்து செயற்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அந்த கோரிக்கையின் வடிவத்தை மாற்றியமைத்தது.அதன்படி பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்று அக்கட்சி வற்புறுத்தியது. பலத்த வாதப்பிரதிவாதங்களின் மத்தியில் ஏனைய கட்சிகளும் அதற்கு ஒப்புக் கொண்டன. ஆனால் கிட்டத்தட்ட ஓராண்டு கழிந்துவிட்டது. ஜெனிவாவுக்கு வெளியே பொறுப்புக்கூறலை கொண்டுபோகும் விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ அல்லது ஏனைய கட்சிகளோ இதுவரை எந்தளவு தூரம் முன்னேறியிருக்கின்றன ? குறிப்பாக பொறுப்புக் கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே எடுத்து அனைத்துலக நீதி மன்றங்களை நோக்கிப் போகவேண்டும் என்று வற்புறுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது கடந்த பன்னிரண்டு மாதங்களிலும் இது தொடர்பில் எதுவரை முன்னேறியுள்ளது? என்ற கேள்விக்கு விடை கூற வேண்டும்.
கடந்த 12 ஆண்டுகளில் தமிழ் கட்சிகள் ஒப்பீட்டளவில் ஒன்றுபட்டு ஒரு கோரிக்கையை முன்வைத்தது அந்த ஒரு சந்தர்ப்பத்தில்தான். ஆனால் அந்தக் கோரிக்கையை முன்வைத்த பின் அதற்காக யாருமே அர்ப்பணிப்போடு உழைத்திருக்கவில்லை என்பதைத்தான் கடந்த ஓராண்டு காலம் நிரூபித்திருக்கிறது. இது எதைக் காட்டுகிறது? ஒரு அரசுடைய தரப்பு தன்னிடம் உள்ள நிறுவனங்களின் மூலமும் அரசுகளுக்கும்-அரசுகளுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளின் மூலமும் ஜெனிவாவை எதிர்கொள்வதற்காக திட்டமிட்டு உழைத்துக் கொண்டிருக்க, ஓர் அரசற்ற தரப்பு, ஐக்கியம் இன்றியும் தனது கோரிக்கைகளுக்காக உழைக்க தேவையான கட்டமைப்புக்கள் எவையும் இன்றியும்,பெருமளவுக்கு வெறுவாய் சப்பிக்கொண்டும்,ஆளுக்காள் கடிதங்களை எழுதிக் கொண்டும், தனக்குள் மோதிக்கொண்டும் இருக்கிறதா?
-நிலாந்தன்-