புவி கண்காணிப்புக்கான செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி-சி 52 என்ற விண்கலம் இன்று (திங்கட்கிழமை) காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணிற்கு செலுத்தப்பட்டுள்ளது.
25 மணிநேர கவுண்ட்டவுன் இன்று காலையுடன் நிறைவடைந்த நிலையில், அதிகாலை 5.59 மணிக்கு இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
ரேடார் செயற்கைக் கோள் புவி கண்ணகாணிப்பு மற்றும் இராணுவ பாதுகாப்புக்கு பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பருவநிலை மாறுதல், விவசாயம், பேரிடர் மேலாண்மை வனப்பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இ.ஓ.எஸ் 04 செயற்கைக்கோள் உதவும் எனவும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரோ மற்றும் அமரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வு மாணவர்கள் வடிமைத்த சிறிய ரக இன்ஸ்பயர் காட்-1 செயற்கைகோளும், இந்தியா, பூட்டான் நாடுகள் ஒருங்கிணைந்து வடிவமைத்துள்ள ஐ.என்.எஸ்-2TD என்ற சிறிய ரக செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
இந்த செயற்கை கோள்கள் புவியில் இருந்து 529 கிலோமீற்றர் உயரத்தில் சூரிய ஒத்திசைவு பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.