இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் இந்தியாவிற்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சர் அண்மையில் இந்தியாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியமை வெற்றியளித்துள்ளது என்றும் நாட்டிற்கு பயனுள்ள முடிவுகளை வழங்கியது என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கைக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்தியா உறுதி வழங்கியுள்ளது என்றும், அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது கடந்த விஜயத்தின் போது இதற்கான அடித்தளத்தை உருவாக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்காக இலங்கை முதலில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவிடம் இருந்து கடனாகப் பெறும் என ஜி.எல்.பீரிஸ் கூறினார்.
எனவே குறித்த கடன் தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் புதுடெல்லிக்கு செல்வார் என்றும் அவர் குறிப்பிட்டார்.