இலங்கை அரசை கண்டித்தும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் தங்கச்சி மடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து இன்று முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும் 50க்கும் மேற்பட்ட மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் தொடர் பிரச்சினை காரணமாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடி தொழில் தேடி அண்டை மாநிலங்களுக்குச் சென்றதால் மீன்பிடி தொழிலாளர்கள் இன்றி விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை குறித்து நேற்று (திங்கட்கிழமை) தங்கச்சிமடம் சூசையப்பர் கோயில் வளாகத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதன்போதே, எதிர்வரும் 21ஆம் திகதி தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் நாளை முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானம் நிறைவேற்றினர்.
மீனவர்களின் இந்த காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரை நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
மீனவர்களின் போராட்டங்கள் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மீன் பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.