“Cultural சௌபாக்யா“ கலாசாரக் கலை நிகழ்ச்சி மற்றும் கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வருகை தந்தனர்.
இலங்கையின் பெருமிதம் மற்றும் கலாசார அடையாளத்தைப் பாதுகாத்தல், வெளிநாட்டுத் தொடர்புகளைப் பலப்படுத்துதல், தனித்துவமான இடங்களை மேம்படுத்துதல் மற்றும் கலாசார பாரம்பரியத்தை எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய பாரம்பரிய கலை மற்றும் கிராமியக் கலை விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சு மற்றும் அவற்றோடு ஒன்றிணைந்த நிறுவனங்கள் இணைந்து, இந்தக் கலாசாரக் கலை நிகழ்ச்சி மற்றும் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன.
இராஜதந்திரப் பிரதிநிதிகளின் பங்கேற்புடனான இந்தக் கலாசாரக் கலை நிகழ்ச்சி, தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது.
இலங்கையானது, இதுவரையில் 48 நாடுகளுடனான கலாசார ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் 48இல் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கலாசார அமைச்சுக்குரிய நிறுவனங்கள், மத்திய நிலையங்கள் மற்று ஜனகலா கேந்திர நிலையத்தில் நடனம் பயிலும் மாணவ, மாணவியரின் நடன நிகழ்ச்சிகளும் இதன்போது அரங்கேற்றப்பட்டன.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்கள், கலாசார விடயங்களுக்குப் பொறுப்பாள இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், ஜனாதிபதியின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.