மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் அடங்கிய ஆவணத்தை இறுதி செய்து பிரதமர் மோடிக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணம் முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டு பின்னரே இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மலையக மக்களின் அரசியல், கலாச்சார, பொருளாதார மற்றும் சமூகத் துறைகள் இலங்கை அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பிற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
காலகாலமாக மலையக மக்கள் பாகுபாடு காட்டப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட சந்தர்ப்பங்களை மேற்கோளிட்ட அவர், இந்த நிலை மாற வேண்டும் என்றும் அதற்காக அரசாங்கம் உட்பட அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படத் தயார் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்திய வம்சாவளித் தமிழ் இலங்கையர்களுக்கான கடப்பாடுகளின் தொகுப்பில் பெரும் பங்கைக் கொண்டிருப்பதாக தாம் நம்புகின்ற இங்கிலாந்து அரசாங்கத்திடம் இதை எடுத்துச் செல்வோம் என்றும் மனோ கணேசன் கூறினார்.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அதன் பின்னர் தமிழகம் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிற அரசியல் கட்சிகளுடன் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு கூட்டமைப்பு தலைமையிலான ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த மாதம் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன.
அத்தோடு புதிய அரசியலமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வின் இலக்கை பாதிக்காது என்பதை உறுதி செய்வதற்காக தமிழ்நாட்டுடன் நேரடி ஈடுபாட்டைக் கோரி கூட்டமைப்பு கடந்த வாரம் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியது.