ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை கருத்திற்கொண்டு அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் சதியே வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்த போராட்டமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன், சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் பலர் ஜனாதிபதியை சந்திக்குமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதியை சந்திப்பது குறித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னதாக அறிவிக்கவில்லை என அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே, ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை கருத்திற்கொண்டு அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் சதியாகவே இந்த சம்பவத்தை பார்க்க முடியும் என அந்தப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.