பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடரில், இம்முறை இரண்டு குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
குழு ‘ஏ’இல் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, டெல்லி கெபிடல்ஸ் அணி, லக்னோவ் சுப்பர் ஜியண்ட்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
குழு ‘பி’இல் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசஸ் ஹைதரபாத் அணி, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இம்முறை இரண்டு புதிய அணிகளின் வருகையுடன் மொத்தம் 10 அணிகள் விளையாட ஒரு அணி, 14 லீக் போட்டிகளில் (7 சொந்த ஊர் மற்றும் 7 வெளியூரில்) விளையாடவுள்ளது.
ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள அணிகளுடன் இரண்டு முறையும், மற்ற குழுவில் அதே வரிசையில் உள்ள அணியுடன் இரண்டு முறையும் விளையாடும். மற்ற குழுவில் உள்ள மீதமுள்ள நான்கு அணிகளுக்கு எதிராக, ஒவ்வொரு அணியும் ஒரு முறை மட்டுமே விளையாடும்.
புனே வோரியர்ஸ் இந்தியா மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய இரண்டு புதிய அணிகளைக் கொண்டிருந்த 2011ஆம் ஆண்டு பதிப்பில் பயன்படுத்தப்பட்ட வடிவம் போன்றது.
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர், எதிர்வரும் மார்ச் 26 ஆம் திகதி தொடங்கி மே 29ஆம் திகதி முடிவடையும்.
மும்பை மற்றும் புனேவில் உள்ள நான்கு மைதானங்களில் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளதாக, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உறுதிப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு அணியும் வான்கடே ஸ்டேடியம் மற்றும் டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் தலா 4 போட்டிகளிலும், புனேவில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியம் (சிசிஐ) மற்றும் எம்சிஏ சர்வதேச மைதானத்தில் தலா 3 போட்டிகளிலும் விளையாடும்.
பிளே ஒஃப் போட்டிகளுக்கான இடம் பின்னர் முடிவு செய்யப்படும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.