இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க் குற்றவாளிகளை தடை செய்வதற்கு பிரித்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மற்றும் தற்போது இலங்கையில் தொடரும் சித்திரவதைகளிற்கும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவே காரணம் என்றும் அவர் கூறினார்.
சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடந்த வருடம் அமெரிக்கா பயணத்தடை விதித்தது போன்று பிரித்தானியாவும் தங்கள் மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகார சபையின் கீழ் தடை செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
மேலும் இந்த நடவடிக்கை பொறுப்புக்கூறல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கையாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் கடப்பாட்டினை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
சவேந்திர சில்வா தொடர்பான யுத்தகுற்ற ஆதாரங்கள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தடா விதிப்பது குறித்து பிரித்தானியா தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.