பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தாம் சந்திக்கவில்லை என பதவி நீக்கப்பட்ட அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிரதமரால் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அவரை சந்திக்கவில்லை என்றும் கூறினார்.
இருப்பினும் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்றவர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
கடந்த வாரம் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையாக குற்றம் சாட் டியிருந்த இவர்கள், நாட்டில் காணப்படும் நெருக்கடியின் பின்னணியை அம்பலப்படுத்தவுள்ளதாகவும் எச்சரித்திருந்தனர்.
அத்தோடு சமீப காலங்களாக நாவை அடக்கிக்கொண்டே கருத்துக்களை தெரிவித்த நிலையில் இப்போது சுதந்திரமாக பேச முடிகிறது என்றும் உதய கம்மன்பில கூறியிருந்தார்.
மேலும் அமைச்சரவையில் இருந்து தம்மை நீக்கியமை மூலம், வெளியே சென்று அவர்களின் தவறான செயல்களை அம்பலப்படுத்த அரசாங்கம் அனுமதித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
கடந்த உள்ளூராட்சி தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அமைக்கும்போது பசில் ராஜபக்ஷ அமெரிக்க பிரஜாவுரிமையை பெற்றிருந்தார்.
இதனை அடுத்து ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்காக, தான் கொண்டிருந்த இரட்டை குடியுரிமையையும் கோட்டாபய ராஜபக்ஷ துறந்திருந்தார்.
தொடர்ந்து நாடாளுமன்றத்திற்குள் இரட்டை குடியுரிமை கொண்டவர்களை அனுமதிக்கும் 20 ஆவது திருத்தத்திற்கு விமல், உதய, வாசு உள்ளிட்டவர்கள் ஆதரவை வழங்கியிருந்தனர்.
இவ்வாறு இருக்க தற்போது நாட்டின் நெருக்கடிக்கு அமெரிக்கர் தான் காரணம் என அவர்கள் கூறியிருப்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.