கம்மன்பில, வீரவங்ச ஆகியோரின் பதவி நீக்கம் அரசியல் தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மைத்திரிபால சிறிசேன மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட 11 பேர் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சுயாதீனமாக செயற்பட வாய்ப்புள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட இருவரையும் திரும்பப் அழைப்பது குறித்த எந்த அறிகுறியையும் ஜனாதிபதி காட்டவில்லை என்பதோடு இணைந்து செயற்பட முடியாதவர்களுக்கு அரசாங்கத்தில் இடமில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அத்தோடு 11 பங்காளி கட்சிகளுடனும் அவர் எவ்வித சந்திப்புகளை நடத்தவில்லை என்பதோடு முடங்கிய பணிகளை மீண்டும் தொடங்க முழுமையான பொதுஜன பெரமுன அரசாங்கத்தை உருவாக்குவது குறித்த நகர்வுகள் நடந்து வருகின்றன.
எவ்வாறாயினும் தற்போது நிலைமையை அமைதிப்படுத்த முன்வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மற்றொரு நெருக்கடியை ஏற்படுத்த நேரமில்லை என்பதால், அனைவரையும் வெள்ளிக்கிழமை அலரிமாளிகைக்கு வருமாறு அறிவித்திருந்தார்.
இருப்பினும் எவ்வித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்களும் தம்மைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு என்ற கருத்துக்கள் போலியானது என்றும் சில குழுக்கள் அதன் பின்னணியில் இருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையில், உதய கம்மன்பில பிரதமரை சந்தித்தால், இந்தக் கேள்விகளுக்கு அவர் முகம் கொடுக்க நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தை அமைப்பதற்கு தற்போது சரியான நேரம் வந்துள்ளதாகவும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆதரவுடன் ஜனாதிபதி அதனை தற்போது பரிசீலித்து வருவதாகவும் சிரேஷ்ட அமைச்சர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
எவ்வாறாயினும், நிலைமையை அவசரமாக அமைதிப்படுத்த அரசாங்கமோ அல்லது பிரதமரோ முயற்சி எடுக்காவிட்டால் ஏற்கனவே எந்தவொரு கட்சியின் ஆதரவும் இல்லாமல் வீதிகளில் இறங்கியுள்ள மக்களின் போராட்டம் விரிவடைய காரணமாக அமையலாம்.