உக்ரைன் மற்றும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையே மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை இன்னும் சில மணி நேரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, அவை தலைநகர் கீவ் நேரப்படி 16:00 மணிக்கு (14:00 GMT) தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நடைபெறும் இடம் வெளியிடப்படவில்லை. பிப்ரவரி 28ஆம் திகதி முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையும், மார்ச் 3ஆம் திகதி இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையும் பெலாரஸில் நடந்தன.
உக்ரைன்- ரஷ்யா இடையே மூன்றாவது சுற்று அமைதி பேச்சுவார்த்தை இன்று!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்றாவது சுற்று அமைதி பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.
இதனைத் உக்ரைன் தூதுக்குழுவை சேர்ந்த டேவிட் அராகாமியா உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் மற்றும் காலம் பகிரங்கப்படுத்தப்படாது என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்னதாக, ரஷ்யா உடனடி போர் நிறுத்தம் மற்றும் ரஷ்யா துருப்புக்கள் உக்ரைனிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென்ற இரு கோரிக்கைகள் உக்ரைன் தரப்பில் முன்வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், உக்ரைன் இராணுவம் தாக்குதலை நிறுத்திவிட்டு ஆயுதங்களை கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் உறுதிப்பட தெரிவித்திருந்தார்.
முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் எவ்வித தீர்மானமும் எட்டப்படாத நிலையில், இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்தையில் உக்ரைனின் மரியுபோல் மற்றும் வோல்னோவாகாவில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு ஐந்து மணி நேர கால அவகாசத்தில் மனிதாபிமான வழித்தடம் அமைக்கப்பட்டு இவ்விரு நகரங்களிலும் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்படுவார்கள் என ரஷ்யா தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த வாக்குறுதி முழுமையாக பின்பற்றப்படவில்லை எனவும் மக்களை வெளியேற்றும் போதுக்கூட ரஷ்ய படையினர் ஏவுகணை தாக்குதல்களை தொடுத்துவந்ததாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வை பெற்றுக்கொள்ளலாம் என உலகநாடுகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்ற நிலையில், ரஷ்ய படையெடுப்பின் 12ஆவது நாளான இன்று மூன்றாவது சுற்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.