ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவது கட்டப் அமைதிப் பேச்சுவார்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவுக்கும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுக்கும் இடையே துருக்கியின் துறைமுக நகரான ஆன்டால்யாவில் நேற்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற்றது.
உக்ரைனில் போர் நடைபெற்று வரும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது, அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக விவாதிப்பதற்காக அந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எனினும், முக்கிய விவகாரங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் எந்த ஒப்பந்தமும் பேச்சுவர்த்தையில் மேற்கொள்ளப்படவில்லை என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘லாவ்ரோவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள அவர், தயாராக இல்லை. அவர் முன்வைக்கும் அம்சங்கள் அனைத்தும் போரில் உக்ரைன் சரணடைய வேண்டும் என்பதைப் போல் உள்ளது. ஆனால், ரஷ்யாவிடம் உக்ரைன் ஒருபோதும் சரணடையாது.
போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு வழித்தடம் அமைப்பதற்கான நம்பிக்கையையும் செர்கெய் லாவ்ரோவ் பொய்யாக்கிவிட்டார்.
எனினும், போரால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்று இருவரும் ஒப்புக்கொண்டோம்’ என கூறினார்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு கருத்து தெரிவித்த ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், ‘உக்ரைன் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அந்த நாடு அனுப்பும் எந்த பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது.
எனினும், சண்டை நிறுத்தம் மற்றும் பாதுகாப்பு வழித்தடங்கள் குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பெலாரஸில் தற்போது பல சுற்றுகளாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைக்கு மாற்று ஏதும் இல்லை. தற்போது உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சருடன் நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தை அதனை நிரூபித்துள்ளது.
அந்தப் பேச்சுவார்.த்தையில், உக்ரைன் தனது மேற்கத்திய சார்பு நிலையைக் கைவிட்டு நடுநிலை வகிக்க வேண்டும், ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்ற ரஷ்யாவின் நிபந்தனைகளை முன்வைத்தேன். அதற்கான பதிலை உக்ரைன் அரசிடமிருந்து எதிர்பார்த்துள்ளேன்.
அந்த நாட்டுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் மேற்கத்திய நாடுகள் பிரச்சினையை மேலும் தீவிரமாக்குகின்றன. இந்த விவகாரத்தில் எங்கள் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நாங்கள் சமாளிப்போம். பொருளாதார விவகாரத்தில் ரஷ்யா எப்போதுமே மேற்கத்திய நாடுகளை சார்ந்து இயங்கவில்லை’ என கூறினார்.
போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே பெலாரஸில் இதுவரை நடைபெற்ற மூன்று கட்ட அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்னதாக கருத்து தெரிவித்திருந்த உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி, ‘சர்ச்சைக்குரிய விடயங்களுக்கும், ரஷ்யாவுடனான மோதலுக்கும் நேட்டோ அமைப்பு பயப்படுகிறது. உக்ரைனை ஏற்க நேட்டோ தயாராக இல்லை என்பதை புரிந்துகொண்டு இந்த விடயத்தில் நான் அமைதியாகி விட்டேன். எதையும் காலில் விழுந்து பெறுகிற நாடாக உக்ரைன் இருக்கக்கூடாது.
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ், லுகான்ஸ்க் ஆகிய 2 ரஷ்ய சார்பு பிரதேசங்களின் நிலை குறித்து சமரசம் செய்ய தயார். (இவ்விரு பகுதிகளையும் உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன்பாக ரஷ்யா சுதந்திர பகுதிகளாக அங்கீகரித்துள்ளது.)
கிரீமியாவை ரஷ்யாவின் அங்கம் என அங்கீகரிக்கும் விடயத்தில் பேச்சுவார்த்தைக்கு தயார்’ என கூறியிருந்தார்.