இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலர் கடனை மூன்று வருடங்களின் பின்னர் தவணை முறையில் திருப்பிச் செலுத்த வேண்டுமே தவிர எவ்வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் நேற்று நாடு திரும்பியதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் அண்டை நாடான இந்தியா இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கைக்கு துணை நிற்கிறது என்பதை நிரூபித்துள்ளது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இயற்கை விவசாயம் மற்றும் அதில் ஜனாதிபதி காட்டிய அக்கறை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்ததாகவும், இந்தியாவில் நானோ உரத் தட்டுப்பாடு நிலவினாலும், இலங்கைக்கு தேவையான அளவு வழங்க ஒப்புக்கொண்டதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வணிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.
இந்தியா ஏற்கனவே 400 மில்லியன் டொலர் கடனும், பெட்ரோல் வாங்க 500 மில்லியன் டொலர் கடனும், ஆசிய கிளியரிங் யூனியன் மூலம் 500 மில்லியன் டொலர்களும் வழங்கியுள்ளது.
அதன்படி, தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இதுவரை மொத்தம் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்கள் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.