உக்ரைனின் மரியுபோலில் நடைபெறுவது மிகப்பெரிய போர்க் குற்றமாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்துள்ளார்.
மேலும், எல்லாவற்றையும் அழித்து, கண்மூடித்தனமாக அனைவரையும் ரஷ்ய படைகள் குண்டுவீசி கொன்று வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தில் வரும் ரஷ்யா மீது இன்னும் கூடுதல் பொருளாதார தடைகள் விதிப்பது பற்றி 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று (திங்கட்கிழமை) பிரஸ்ஸல்ஸில் ஒன்று கூடினர்.
இதன்போதே ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் தலைவர் ஜோசப் போரெல் இந்த கருத்தினை வெளியிட்டார்.
மேலும், இந்த கூட்டத்தில் பேசிய லிதுவேனியா மற்றும் அயர்லாந்தின் வெளியுறவு அமைச்சர்கள், ‘ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீதான, குறிப்பாக அதன் இலாபகரமான எரிசக்தி துறையை இலக்காகக் கொண்டு, பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, ஜேர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னாலெனா பாயர்பாக் கூறுகையில், ‘மருத்துவமனைகள், திரையரங்குகள் உள்ளிட்ட பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. என்னைப் பொருத்தவரை இவை தெளிவான போர்க் குற்றங்களாகும்’ என கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகள் அவற்றின் 40 சதவீத எரிவாயுவிற்கு ரஷ்யாவை நம்பியுள்ளன. இந்நிலையில் ரஷ்ய எண்ணெயை குறிவைப்பது என்பது 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடினமான தேர்வாகும்.
உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், மூத்த அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உட்பட 877 பேர் மீது பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ளது.
இந்நிலையில், புதிதாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால் ஐரோப்பாவுக்கான எரிவாயு ஏற்றுமதியை ரஷ்யா நிறுத்தக்கூடும் என்பதால், அதில் ஐரோப்பிய ஒன்றியம் மேலதிக தடைகளை விதிப்பதற்கு தயக்கம்காட்டி வருகிறது.
ஆனால் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.