நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடை (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள் (திருத்தம்) சட்டமூலத்தை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் வெறும் ஒப்பனை அல்ல என்றும் நாட்டின் தற்போதைய தேவைகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட அர்த்தமுள்ள முயற்சி என்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தில் முன்வைக்கப்படும் ஒவ்வொரு திருத்தங்களும் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்தார்.
இதனை அடுத்து இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பின் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அரசாங்கம் கொடூரமான சட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டுவந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
கொடூரமான சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்து பொதுமக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்ற முயற்சிக்கின்றது என்றும் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார்.