நேட்டோ தனது கிழக்குப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகளின் அதிகரிப்பை மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளிக்க உள்ளது என நேட்டோ அமைப்பின் பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் தெரிவித்துள்ளார்.
ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, பல்கேரியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு அதிக துருப்புக்களை அனுப்ப அவர் உறுதியளித்தார்.
மேலும், உக்ரைனுக்கு இரசாயன மற்றும் அணு ஆயுத தடுப்பு ஆயுதங்களை வழங்க, நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்த அவசர உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஸ்டோல்டன்பெர்க் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் தாக்குதல் குறித்து விவாதிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் நேட்டோ அமைப்பின் அவசர கூட்டம் இன்று வியாழக்கிழமை பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடைபெறுகிறது.
இதில், ரசாயனம், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பதற்கான உபகரணங்கள் மற்றும் இணைய பாதுகாப்பு உதவி உள்பட உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்கு நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாட்டில் ஒப்புக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனில் அதிகரித்து வரும் அச்சங்களுக்கு மத்தியில் பேரழிவு ஆயுதங்களை எதிர்கொள்வதற்கு நேட்டோ உறுப்பு நாடுகள் குறிப்பாக உக்ரைனுக்கு பொருள்களை அனுப்புவதற்கான முதல் முயற்சி இதுவாகும்’ என கூறினார்.