ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும். இந்தோனேசியா மற்றும் பிற நாடுகள் ரஷியாவை அகற்றுவதில் உடன்படவில்லை என்றால், உக்ரைனை கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.
உக்ரைன் மீதான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தினால் அதற்கு நேட்டோ தக்க பதிலடி கொடுக்கும்.
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ரஷ்யாவிற்கு சீனா உதவி வழங்கும் சாத்தியம் குறித்து, கடந்த வாரம் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடன் மிகவும் நேரடியான உரையாடல் நடத்தினேன்.
ரஷ்யாவுடன் இருப்பதைவிட அதன் பொருளாதார எதிர்காலம் மேற்கத்திய நாடுகளுடன் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளதாக நினைக்கிறேன்’ என கூறினார்.
மேலும், இதன்போது, உக்ரைன் படையெடுப்பு தொடர்பாக மாஸ்கோ மீது அழுத்தத்தை அதிகரிக்கும் விதமாக, ரஷ்ய உயரடுக்குகள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் மீதான பொருளாதார தடைகளின் புதிய தொகுப்பை ஜோ பைடன் அறிவித்தார்.
ஜி-7 கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் மத்திய வங்கி பரிமாற்றங்களில் தங்கத்தைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதாக அறிவித்தனர்.