உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, இந்த தலைமுறையில் நிகழ்ந்த பாதுகாப்பு மீதான மிகப்பெரிய அச்சுறுத்தல் என நேட்டோ அமைப்பின் பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் தெரிவித்துள்ளார்.
பிரஸ்ஸல்ஸில் நேற்று (வியாழக்கிழமை) ஒன்றுக்கூடிய நேட்டோ நாடுகளின் தலைவர்களின், நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது குறித்து எடுத்துரைத்த போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தங்களின் சுதந்திரம் மற்றும் வருங்காலத்திற்காக உக்ரைன் மக்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் சண்டையிட்டு வருகின்றனர்.
நாங்கள் உக்ரைன் மக்களுடன் துணைநிற்கிறோம். உயர் தயார்நிலையுடன் கூடிய அதிகளவிலான படைகள் கிழக்குப்பகுதியில் நிறுத்தப்படும். வான் தளத்தில் அதிக ஜெட் விமானங்களும், கடல்வழி பாதுகாப்புக்காக, நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவை நிறுத்தப்படும்.
இராணுவ ஆயுதங்கள் அதிகரிப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்டவை பலப்படுத்தப்படும். அணு ஆயுதங்கள் மற்றும் உயிரி ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக உக்ரைன் தன்னை பாதுகாத்துக்கொள்ள நேட்டோ உதவும்’ என கூறினார்.
இந்த மாநாட்டில் கிழக்கு ஐரோப்பாவில் தங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த நேட்டோ நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
நேட்டோ நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் ‘நேட்டோ பாதுகாப்பு திட்டங்களை முடுக்கிவிட்டுள்ளோம். கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படையின் 40,000 துருப்புகளை நிறுத்தியுள்ளோம்.
உடனடியாக போரை நிறுத்த வேண்டும். யுக்ரேனிலிருந்து தங்கள் நாட்டு படையினரை திரும்பப்பெற வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.