புலிகளால் துப்பாக்கிமூலம் பெறமுடியாமல் போனதை, அரசியல் ஆயுதம்மூலம் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மகாநாயக்க தேரர்களை நேற்று(வியாழக்கிழமை) சந்தித்து ஆசிபெற்றபோதே பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “சர்வக்கட்சி மாநாட்டில் கூட்டமைப்பு பங்கேற்றதில் உள்நோக்கம் இருக்கின்றது.
தற்போதைய நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி தமது இலக்கை அடைவதற்கு கூட்டமைப்பினர் முற்படுகின்றனர்.
அதாவது புலிகளால் துப்பாக்கிமூலம் பெறமுடியாமல்போனதை, அரசியல் ஆயுதம் மூலம் பெற முற்படுகின்றனர்.
அனுமான் இலங்கையை தீயிட்டு அழித்தார் எனக் கூறப்படுகின்றது. அதுபோலவே அசிங்கமான அமெரிக்கரும் தற்போது நாட்டை அழித்துவருகின்றார்.
அரசுக்கான பெரும்பான்மையை இல்லாது செய்தால் அவர் அமெரிக்கா ஓடிவிடுவார்.“ எனத் தெரிவித்துள்ளார்.