இந்தியாவும் – சீனாவும் பரஸ்பரம் உதவி செய்துக்கொள்ள வேண்டும் எனவும், ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்திக்கொள்ளக் கூடாது எனவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்த வாங் யி தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்திக் குறிப்பில், ” சீனாவும், இந்தியாவும் ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இல்லை. இருநாடுகளுக்கு இடையே நிலவும் மாறுபாடுகளை சரியான முறையில் கையாள வேண்டும்.
இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகள்தானே தவிர போட்டியாளா்கள் அல்ல. இருநாடுகளும் வெற்றிபெற பரஸ்பரம் உதவி செய்துக்கொள்ள வேண்டும்; அதைவிடுத்து ஒருவரை ஒருவா் பலவீனப்படுத்திக் கொள்ளக்கூடாது.
முதிா்ந்த அறிவாா்ந்த அண்டை நாடுகளாக இருதரப்பு உறவுகளில் எல்லைப் பிரச்னையை பொருத்தமான இடத்தில் வைத்து இந்தியாவும், சீனாவும் கையாள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.