அமைச்சரவையை உடனடியாக கலைத்து, இடைக்கால அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ கேட்டுக் கொண்டுள்ளார்.
கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதே முக்கியமான விடயமாகும். சாதாரண நேரத்தில் எடுக்கும் தீர்மானங்கள் இப்போது நாட்டுக்கு பொறுந்தாது.
எனவே, ஜனாதிபதி உடனடியாக தனது அமைச்சரவையை கலைத்துவிட்டு, நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தி, இணக்கப்பாட்டுடன் தற்காலிக அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும்.
அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடன் இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்படுத்தி இவற்றுக்கு தீர்வுக் காணப்பட்டதை அடுத்து, பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இந்த ஒரு நடவடிக்கையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வாக அமையும் என நாம் கருதுகிறோம்.
அதனைவிடுத்து, இடைக்கால தீர்மானங்களை எடுத்தோ தடைகளை விதித்தோ மக்களை கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள். இதனை மாற்றுவது கடினமாகும்.
இந்தநிலைமையில், இடைக்கால அரசாங்கமொன்றை அமைத்து பொதுத் தேர்தலொன்றுக்கு செல்லாவிட்டால், நாட்டின் நிலைமை இன்னமும் பாரதூரமாக மாற்றமடையும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.