தட்டுப்பாடு நிலவும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றுக்காக நிதியமைச்சினால் சுகாதார அமைச்சுக்கு 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 3 மாதங்களுக்கு மருந்து விநியோகத்தை முகாமைத்துவம் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 22 மில்லியன் டொலர் தேவையாக இருந்ததாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரையில் அத்தியாவசிய மற்றும் அவசர மருந்து பொருட்கள் 14 இல் 9 மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த மருந்து பொருட்கள் எதிர்வரும் ஒன்றரை மாதத்திற்கு மாத்திரமே போதுமானதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்திய கடனுதவின் கீழ் நாட்டுக்கு அவசியமான மருந்து பொருட்களுக்காக 80 மில்லியன் டொலர் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.