நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில், நாடாளுமன்றம் மற்றும் அதன் வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற பாதுகாப்பு தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போதே, நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேரம் காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், காலை 11.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை, மருத்துவச் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் மற்றும் விளையாட்டில் ஊக்கமருந்துக்கு எதிரான மரபுச் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாடாளுமன்றில் 113 என்ற பெரும்பான்மையை காண்பிக்கும் குழுவுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயாராகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.