அரசாங்கத்தில் இருந்து விலகி, நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுகிறது இ.தொ.கா..
கட்சியின் ஏகமனதான தீர்மானத்துக்கிணங்க, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்தது.
நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதன் நிலைப்பாட்டைத் தெரிவித்தது.
இதேவேளை, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பதவியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இராஜினாமா செய்வதோடு, அவரும் இ.தொ.காவின் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கும் தீர்மானித்தனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கு தலைசாய்த்தே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
தொடர்ந்தும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் தீர்மானங்களை எடுக்கவும் மக்களுக்காக முன்னிற்கவும் இ.தொ.கா தயாராக இருக்கின்றது“ என பதிவிட்டுள்ளார்.