உக்ரைனின் புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா படுகொலை தொடர்பான விசாரணைக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளது.
இது குறித்து ஐ.நாவில் பேசிய இந்திய தூதர் திருமூர்த்தி, “ உக்ரைனில் பொதுமக்கள் மீதான தாக்குதல் கவலையளிப்பதாகவும், புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு மருத்துவ உதவிகள் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், புச்சா படுகொலை தொடர்பான விசாரணைக்கும் இந்தியா ஆதரவு அளிப்பதாகவும் கூறினார்.
ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் பதற்றம் 40 நாட்களை கடந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில், உக்ரைனின் புச்சா நகரில் உள்ள ஒரு புதைகுழியில் 300இற்கும் மேற்பட்டோர் புதைக்கப்பட்டதாகவும், அந்த நகரம் முழுவதும் சடலங்கள் சிதறிக் கிடப்பதாகவும் அந்நகர மேயர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்து. இந்நிலையில், இந்த விடயம் குறித்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.