ராஜபக்சக்களின் வீட்டுக்கு முன்னால் சென்று போராட்டம் நடத்துங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், மக்கள் தமது போராட்டத்தை கைவிடக்கூடாது என்பதே தனது வேண்டுகோள் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அரசாங்கத்தின் பிரதம கொறடாவான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தீவிரவாதிகள் என கூறியமைக்கும் அவர் கடும் கண்டனத்தை வெளியிட்டார்.
பால் பக்கெட் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 89 வயதான தாய் ஒருவரும் தீவிரவாதியா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
225 பேரும் வெளியேற வேண்டும் என மக்கள் கூறுவதன் அர்த்தம் அமைப்பில் மாற்றம் வேண்டும், நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும் என்பதே என்றும் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றே இந்த தலைமுறை விரும்புகிறது என்றும் அது நடக்கும் வரை போராட்டம் ஓயாது என்றும் அவர் தெரிவித்தார்.