இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும்மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவாஎ சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
தென் மாகாணத்தில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.