ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு எவ்வித முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்றுசெய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் அமைதியின்மையை தணிக்கவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவும் இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பாகவும் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழு இரண்டாவது தடவையாக ஜனாதிபதியை சந்தித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேச்சைக் குழு மற்றும் 11 கட்சிகளின் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மையமாக வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றது.
அரசியலமைப்பின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களை மாத்திரம் அமுல்படுத்துவதற்கு உடன்படுவதாக ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் தெரிவித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய இரண்டு கட்சிகளும் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில், அதற்கு அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள் எதுவும் இல்லாததால், தேசிய நிறைவேற்று சபையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஜனாதிபதி நிராகரித்தார்.
அத்துடன், அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி இடைக்கால அரசாங்கம் அமையும் பட்சத்தில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை உண்மையாக ஆதரிக்குமா என்ற சந்தேகத்தையும் ஜனாதிபதி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.