மட்டக்களப்பு பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபன கிளையினை இன்று பொதுமக்கள் முற்றுகையிட முயற்சித்தவேளையில், அதனை பொலிஸார் தடுத்த நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு மக்களும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
இன்றைய தினம் மட்டக்களப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருட்கள் வழங்கப்படாது என்று வெளியான அநாமதேய தகவல்களையடுத்து பெருமளவானோர் இன்று மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினை முற்றுகையிட முற்பட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் நிலைமையினை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துடன் அங்கிருந்தவர்களை கலைந்துசெல்லுமாறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.