இலங்கைப் பிரதிநிதிகள் குழுவுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணிமாகியிருந்தனர்.
இந்த பயணத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் இன்று ஆரம்பமாகும் பேச்சுவார்த்தை எதிர்வரும் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை வெற்றியடையும் பட்சத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஐந்து தவணைகளில் இது இலங்கைக்கு கிடைக்கவுள்ள நிலையில் இதன் மூலம் உலக நிதித்துறையின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.