ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது 30 ஆயிரம் லீற்றர் எரிபொருளைக் கொண்ட பௌசருக்கு ஒரு குழுவினர் தீ வைக்க முற்பட்டதைத் தடுக்கவும், அதனால் ஏற்படக்கூடிய பாரிய சேதங்களைத் தடுக்கவும் பொலிசார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டியிருந்ததாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் போது பொலிஸார் அதிக பலத்தை பிரயோகித்தனரா என்பது தொடர்பில் பொலிஸ் தலைமையக மட்ட விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், காயமடைந்த மேலும் 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் இன்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ரயில் மார்க்கத்திற்கும் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டது.
அத்துடன், எரிபொருள் பவுசர் ஒன்றையும் மக்கள் தடுத்து நிறுத்தியிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், போராட்டக்காரர்கள் கலைந்துசெல்லவில்லை. இதனையடுத்து கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதிலுக்கு போராட்டக்காரர்களும் கல்வீச்சு தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ரம்புக்கனை பகுதி போர்க்களமாக மாறியது.
இதனைத் தொடர்ந்து சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவர் தற்போதைய நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் மிஹிரி பிரியங்கனி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒருவருக்கு சத்திரசிகிச்சை நிறைவடைந்துள்ளதாகவும், மேலும் இரண்டு பேருக்கு சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.