ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டு வருவதுடன், நீதியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், காயமடைந்த மேலும் 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் இன்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ரயில் மார்க்கத்திற்கும் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டது.
அத்துடன், எரிபொருள் பவுசர் ஒன்றையும் மக்கள் தடுத்து நிறுத்தியிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், போராட்டக்காரர்கள் கலைந்துசெல்லவில்லை. இதனையடுத்து கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதிலுக்கு போராட்டக்காரர்களும் கல்வீச்சு தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ரம்புக்கனை பகுதி போர்க்களமாக மாறியது.
இதனைத் தொடர்ந்து சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டு வருவதுடன், நீதியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கமைய ரம்புக்கனை சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் மிகுந்த கவலையடைவதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
யாரேனும் ஒருவர் மீது வன்முறையை கையாளும்போது, அமைதியான போராட்டகார்களின் உரிமையும் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களையும், அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்த வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ரம்புக்கனை சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் தாம் கவலையடைவதாக இலங்கை மற்றும் மலேசிய நாடுகளுக்கான கனேடிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் வன்முறைக்கு காரணமானவர்கள் பொறுப்பு கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் விடயத்தில், அதிகப்பட்ச விதிகள் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் இலங்கை மற்றும் மலேசிய நாடுகளுக்கான கனேடிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று ரம்புக்கனையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung அழைப்பு விடுத்துள்ளார்.
ரம்புக்கனையில் இருந்து வெளியாகும் செய்தியால் தான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான போராட்டத்திற்கான மக்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது தனது ட்விட்டர் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ரம்புக்கனை சம்பவத்தை தான் வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டுமுதல் தமது ஐந்துவருட ஆட்சியில், நிராயுதபாணியான பொதுமக்கள் மீது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாக்குதல்களை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எந்த தரப்பில் இருந்தாலும் தீர்வுகளுக்கு வன்முறை வழியாகாது என முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இதுவரை ஏற்பட்ட அழிவுகள் போதும் எனவும், எந்த விலைக்கொடுத்தேனும் அமைதியை பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அதிகாரிகள் மற்றும் ஆர்ப்பாட்டகாரர்கள் வன்முறையை கையாளக்கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், வன்முறைகள் தொடர்ந்தும் அதிகரிக்காது இருக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரம்புக்கனையில் நிராயுதபாணியான மக்கள் மீது மிலேச்சதனமான முறையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையை தாம் வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்படுவதற்கு நாட்டு மக்களுக்கு உரிமைக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்படும் பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கான அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், வாழ்வதற்காக சூழ்நிலையை உருவாக்கி தருமாறு கோரியே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரத்துபஸ்வெல சம்பவமும் இதேபோன்றதொரு அழிவாகவே காணப்பட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் ஒரு மனித படுகொலையாகும் எனவும், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிலைமையை கட்டுப்படுத்த கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு பதிலடியாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களால் தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், கல்வீச்சு தாக்குதலுக்கு பொலிஸாரின் பதில் துப்பாக்கி பிரயோகமா என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, ரம்புக்கன சம்பவத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகள் வெட்கத்திற்கு உரியது என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன விமர்சித்துள்ளார்.
தமது டுவிட்டர் பக்கத்தில் மஹேல ஜயவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறையாக செயற்பட்டு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் பொதுமக்களை கைது செய்யாமல் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதுதான் ஜனநாயகமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் பொறுப்பு கூறவேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த துப்பாக்கி பிரயோகத்தை வன்மையாக கண்டிப்பதாக பீல்ட் மார்சல் சரத்பொன்சேக்கா தமது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதவியேற்று 48 மணிநேரத்திற்கும் ஒரு உயிர் பறிபோயுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தெற்காசியாவுக்கான சர்வதேச மன்னிப்புச் சபைக் கிளையும் இந்த சம்பவத்தைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
ரம்புக்கனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பிலேயே இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.
மேலும், துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணைளை முன்னெடுப்பதற்கு மூவரடங்கிய விசாரணை குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
இதேவேளை, இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் சுயாதீனமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், படையினர் மற்றும் பொலிஸார் அவதானமாக செயற்பட வேண்டும் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது 30 ஆயிரம் லீற்றர் எரிபொருளைக் கொண்ட பௌசருக்கு ஒரு குழுவினர் தீ வைக்க முற்பட்டதைத் தடுக்கவும், அதனால் ஏற்படக்கூடிய பாரிய சேதங்களைத் தடுக்கவும் பொலிசார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டியிருந்ததாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் போது பொலிஸார் அதிக பலத்தை பிரயோகித்தனரா என்பது தொடர்பில் பொலிஸ் தலைமையக மட்ட விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவர் தற்போதைய நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் மிஹிரி பிரியங்கனி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒருவருக்கு சத்திரசிகிச்சை நிறைவடைந்துள்ளதாகவும், மேலும் இரண்டு பேருக்கு சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.