ரம்புக்கனை பொலிஸ் பகுதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
இந்த நிலையில், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இதனையடுா்அத்துடன், காயமடைந்த 28 பேர் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து, மறு அறிவித்தல்வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் மா அதிபர் அறிவித்திருந்தார்.
அத்தோடு, பொதுமக்களை தங்கள் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் அவசரத் தேவைகளுக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் அவர் அறிவித்திருந்தார்.
இதேவேளை, ரம்புக்கனை ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் அத்துமீறி செயற்பட்டதா என்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்க அனைத்து மக்களும் பாடுபட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.