ரம்புக்கனை சம்பவம் குறித்து சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனை செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ரம்புக்கனை சம்பவம் குறித்து கவலையடைகிறோம். இந்த சம்பவம் குறித்த உண்மைகளைக் கண்டறிய சாதாரண சோதனைகளை மேற்கொள்ள முடியும்.
முச்சக்கர வண்டிக்கு பொலிஸார் தீ வைப்பது மற்றும் எரிபொருள் பவுசரை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களைக் காட்டும் காணொளிகள் வெளியாகின.
இந்நிலையில் விசாரணைக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பரவும் குறித்த சம்பவம் தொடர்பான காணொளிகள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கட்டாயமாக சி.சி.ரி.வி. காணப்படும். எனவே அதனை பரிசோதிப்பதன் மூலம் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள முடியும்.
இதன்மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். நாட்டில் பிரச்சினைகள் உள்ளன. அவற்றை அரசியலாக்கமால் தீர்வு காண வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.