அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ். தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோரே அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் மிகவும் இக்கட்டான நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் இதற்கு உரிய தீர்வுகாணுமாறு தாம் முன்வைத்த கோரிக்கைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்கவில்லை என்றும் பைசல் காசிம் தெரிவித்தார்.
எனவே, அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து இன்று முதல் தாம் விலகுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ். தௌஃபீக் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் ஆகியோர் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கியதுடன் அன்றிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.