நாட்டை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் மீண்டும் எடுத்துள்ள முயற்சி வெற்றிப்பெறுவதற்கான ஒரு துளி அறிகுறிகூட தென்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று(புதன்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மலையக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே, இந்த அரசாங்கத்துடன் பயணிக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு மக்கள் ஆணை வழங்கினர்.
இந்நிலையில், மக்களின் உணர்வுகளை மதித்தே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.
தற்போதைய சூழ்நிலையில், மலையக மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாத காரணத்தினால் தான், தனது அமைச்சுப் பதவியை ஜீவன் தொண்டமான் இராஜினாமா செய்திருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சிறந்த அனுபவம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சர்களாக செயல்பட்ட போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அவர்களாலே சமாளிக்க முடியாத சூழ்நிலையில், தற்போது இரண்டாம் கட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்படுவதன் மூலம் எவ்வாறு நாட்டின் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு அரசாங்கம் தீர்வுக்காண போகின்றது என்பது கேள்விக்குறியானது.
ஜனாதிபதி இரசாயண உரத்தை தடை செய்தமை தவறு என்று ஒரு வருட காலத்திற்கு பிறகு ஒப்புக்கொண்டுள்ளதைப் போல், புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை நியமனங்கள் மூலம் பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய முடியவில்லை என்பதை விரைவில் ஒப்புக்கொள்வார்.
ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பங்காளர்களாக இருந்த போதிலும், கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கொள்கை ரீதியிலான பிரேரணைகளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது காலத்துக்கு ஏற்ப ஆதரித்தும் எதிர்த்தும் வாக்களித்திருந்தது.
தற்போதையை சூழ்நிலையிலும் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்பவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முடிவுகள் அமைந்திருக்கும் என்பதற்கு மாற்றுக் கருத்துக்களில்லை.
இலங்கைக்கு இப்போது 51 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் இருக்கிறது. இதில் சுமார் 35 பில்லியன் டொலர் வரை கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளி வைத்திருக்கிறது. இந்த ஆண்டிலேயே சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்களை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கிறது.
இந்த வாரமே 76 மில்லியன் டொலர் கடன் தவணையைச் செலுத்துவதற்கான ‘கெடு’ இருக்கிறது. ஆனால், அதனைத் திருப்பிச் செலுத்த முடியாதென்று, இலங்கை மத்திய வங்கி அறிவித்திருக்கிறது. இந்நிலைமைக்கு, அரசாங்கத்தின் நிர்வாகத் தோல்வியே முற்றிலும் காரணமாகும்.
இவ்வாறான சூழ்நிலையில், இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரனும், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.காவின் முக்கியப் பொறுப்பாளர்களும் கலந்துரையாடி மக்கள் சார்ந்த முடிவுகளை எடுப்பதில் அனைவரும் ஒருமனமாக இருக்கின்றோம்.
எல்லா வளங்களுடனும் இருந்த நாட்டைப் பொறுப்பேற்ற தற்போதைய அரசாங்கத்தால் நாடு பின்தள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில், தற்போது பின்தள்ளப்பட்டுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா? என்ற கேள்வி எம் மனதில் எழுந்திருக்கிறது.
எவ்வாறாயினும், மக்கள் சார்ந்த தீர்மானங்களையே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் எடுக்கும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.