அமெரிக்க மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லா, சீனாவின் ஷாங்காயில் உள்ள தனது உற்பத்தி நிறுவனத்தில் உற்பத்தியை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
நகரத்தில் மிகப்பெரிய கொரோனா பரவரல் ஆரம்பித்ததைத் தொடர்ந்து வணிக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொடங்குவதற்கான வழிகாட்டுதலை உள்ளுர் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
சீனா டெய்லியை மேற்கோள்காட்டி, ஷாங்காய் டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்திபிரிவின் இயக்குனரான சாங் கேங், ‘ஒரு தயாரிப்பை மீண்டும் தொடங்கவுள்ளதோடு அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களில் உற்பத்தியை அதிகரிப்போம்’ என்று கூறினார்.
அங்கு, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் சுமார் 8 ஆயிரம் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு திரும்பியதால், கார் மின்கலங்கள் மற்றும் மின் சாதனங்களின் உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காயை தளமாகக் கொண்ட டெஸ்லாவின் உதிரி பாகங்களை வழங்குபவர்களும், அண்டை மாகாணங்களான ஜெஜியாங் மற்றும் ஜியாங்சுவும் விநியோகத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர் என்று சாங் கூறினார்.
கொரோனா பூட்டுதல் காரணமாக ஷாங்காய் உற்பத்தி நிறுவனத்தில் உற்பத்தி இடைநிறுத்தம் மே நடுப்பகுதி வரை தொடரும் என்ற ஊடக அறிக்கைகளை டெஸ்லா நிறுவனம் மறுத்திருந்தது.
ஷாங்காயில் உள்ள உற்பத்தி நிறுவனமானது அமெரிக்காவிற்கு வெளியே டெஸ்லாவின் முதல் ஆலையாகும், அங்கு உற்பத்தி செய்யப்பட்ட மின்சார வாகனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை கடந்த ஆண்டு ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. டெஸ்லாவின் முக்கிய சந்தைகளில் சீனாவும் ஒன்று.
ஷாங்காயின் 25 மில்லியன் மக்கள்தொகை கொரோனா வைரஸ் வழக்குகளின் புதிய பரவல் உணரப்பட்ட நிலையில் முடக்கல் நிலை அறிவிக்கப்பட்டது. அந்த முடக்கலானது முதலில் ஏப்ரல் 5 வரை நீடிக்கும் எனத் திட்டமிடப்பட்டபோதும் நோய்த்தொற்றுகள் அதிகமாக இருப்பதால் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.